நிலங்களில் கையால் தொடும் உயரத்தில் உள்ள மின்வயர்: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - விவசாயிகள் வேதனை! தூத்துக்குடி: சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் அருகில் ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களிலும் குத்தகைக்கு நிலம் எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர். நடப்பு பருவத்தில் நெல் விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லாததால், தங்களது வீடுகளில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான சோளப் பயிரை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். தற்போது அந்த சோளப் பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன.
இந்நிலையில் அப்பகுதியில் விவசாயத்துக்கு வழங்கப்படும் பிரதான மின் வயர் தாழ்வாக செல்வதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காற்று வீசுகையில் சோளப் பயிர் மின் வயரில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுவாதக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தாழ்வாக செல்லும் மின் வயர்கள் விவசாயிகள் மற்றும் ஆடு, மாடுகள் மீது அறுந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுவதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வயர்கள் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக விவசாய நிலங்களில் தொங்கி வரும் நிலையில், இதுகுறித்து பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயி ராஜன் கூறுகையில், "தற்போது போதிய மழை இல்லாமல் இருப்பு வைத்துள்ள தண்ணீரை கொண்டு சோளம் பயிரிட்டு உள்ளேன். ஆனால் இந்த மின் வயர் தாழ்வாக செல்வதால் சோள பயிரில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு பயிர்கள் சேதமாகின்றன. இதுகுறித்து மின் அதிகாரிகளுக்கு தெரிவித்தும், தற்போது வரை சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் பெரும் விபத்து நிகழும் முன் இந்த அபாய மின் வயர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: தங்கம் விலை திடீர் சரிவு! இதான் சரியான நேரம் சட்டு புட்டுனு கடைக்கு கிளம்புங்க!