தூத்துக்குடியில் வாழைத்தார் விற்பனை ஜோர்! மகிழ்ச்சியில் விவசாயிகள் தூத்துக்குடியில் உள்ள சந்தையில் பொங்கல் (Pongal Festival) பண்டிகையையொட்டி, வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், கூட்டாம்புளி, பழையகாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வாழைத்தார்களை வியாபாரிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
அதன்படி, இன்று (ஜன.13) காலை 8 மணிக்கு ஆரம்பித்த சந்தையில், நாட்டு வாழைத்தார் 800 ரூபாய்க்கும், கதளிதார் 500 ரூபாய்க்கும் என ரூ.60 லட்சம் வரை வாழைத்தார்கள் விற்பனை ஆகின. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இங்கிருந்து இந்த வாழைத்தார்கள் திண்டுக்கல், பொள்ளாச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் ஏற்றி செல்லப்படுகின்றன.
மேலும், பொங்கல் பண்டிகைக்காக இங்கு மதுரை, தேனி, மேலூர் உள்ள பகுதிகளிலிருந்து சுமார் 60,000 கட்டு கரும்புகள் லாரிகளில் வந்து குவிந்துள்ளன. இதனால் கரும்பு விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால், கரும்பு விற்பனையிலுள்ள வியாபாரிகள், அவற்றை வாங்க செல்லும் பொதுமக்கள் என சந்தையில் கூட்டம் அலைமோதுகின்றது.
இவ்வாறு தூத்துக்குடி மாநகருக்கு மட்டும் சுமார் 60 ஆயிரம் கரும்புக்கட்டுகள் வந்து குவிந்துள்ள நிலையில், ஒரு கட்டுக்கு 15 கரும்புகள் என ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கரும்பு கட்டுகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: Pongal: ஒரு கிலோ மல்லிகைப் பூ இவ்வளவு விலையா? மலைக்கும் மக்கள்!