தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் சட்டமன்றம் தருவை குளம் ஊராட்சியில் ஏ.எம்.பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். பாசன வசதிக்காக இந்த கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது.
இந்த குளத்தில் இருந்துதான் விவசாயம் மற்றும் குடிநீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த குளத்திற்கு அருகே கோஸ்டல் எனர்ஜென் என்ற தனியார் அனல் மின் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆலையின் கழிவுகள், அருகே உள்ள குளத்தில் திறந்து விடுவதால் விவசாய நிலங்களின் உப்புத்தன்மை அதிகரித்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் குடிநீராகவும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்த கழிவுநீரை குளத்தில் ஆடு, மாடுகள் குடிப்பதால் இறந்து விடுவதாகவும், குளத்து நீரை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு தோல் நோய், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வருவதாகவும், தனியார் ஆலைக்க்கழிவுகள் கலப்பது குறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஏன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் 600 குடும்பம் உள்ளது. எங்களின் தொழிலே ஆதி காலம் முதல் விவசாயம்.மழை இல்லாத நேரத்தில் கண்மாயை பராமரித்து விவசாயம் செய்வோம். ஆனால் தற்போது தனியார் நிறுவன கழிவுகளை இந்த கண்மாயில் கலந்து விட்டதால், விவசாயம் செய்யும் மக்கள் வெளியே சென்று வேறு தொழில் செய்து வருகின்றனர்.