கரோனா வைரஸ் உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளாக தகுந்த இடைவெளி, ஊரடங்கு உத்தரவு, முகக்கவசங்கள், கையுறைகள், முழு உடல் பாதுகாப்பு கவச உடைகள், கிருமிநாசினி திரவங்கள், கபசுரக் குடிநீர் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்தியாவில் இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
கரோனா அபாயத்தை எதிர்கொள்வதில் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியே அக்கறையோடு செயல்படவேண்டிய சூழல் தற்போது அவசியமாக உள்ளது. கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி அரசு செயல்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தமிழர்களின் பாரம்பரிய தமிழ் மருத்துவக் குறிப்புகளை பின்பற்றி முகக் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
என்னென்ன மூலிகைகள்
நொச்சி இலை, திருநீற்றுப்பச்சிலை, சித்தரத்தை, கிச்சிலிக்கிழங்கு, வெட்டிவேர், ஏலக்காய், புதினா உப்பு என பல்வேறு தமிழ் மூலிகை மருந்துகளை குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் சேர்த்து அதனை மூலிகை நறுமண பவுடராக்கி முகக்கவசங்களின் உள்ளே தனி லேயராக அடைக்கின்றனர். பின்னர் அது சர்வதேச தரத்தில் தைக்கப்பட்டு குறைந்த விலையில் வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கோவில்பட்டியில் தயாராகும் மூலிகை முகக்கவசம் நோய் வரும்முன் காப்பதே சிறந்த வழி என்ற அடிப்படையில் இந்த மூலிகை நறுமண முகக்கவசத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே, நாள்தோறும் பல ஆயிரம் முகக்கவசங்கள் கோவில்பட்டியில் இருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகிக் கொண்டிருக்கின்றன. கரோனாவை எதிர்க்கும் உத்தியும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளுடன் கோவில்பட்டியில் தயாராகும் மூலிகை முகக் கவசங்களில் இருக்கிறது என்பது இனிவரும் நாட்களில் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, கரோனாவை வென்றது எப்படி?