தூத்துக்குடி:விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு அதிமுக சார்பில், ஏழை எளியோருக்கு புத்தாடைகள், காலணிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ பேசியதாவது:
"கரோனா காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள். தற்போது எடப்பாடி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பணி என்பது மகத்துவமான பணி கரோனா காலக்கட்டத்தில் தங்கள் இன்னுயரையும் கருதாமல் மக்களுக்கு பணியாற்றியவர்கள்.
அரசியல் பாகுபாடு பார்க்காமல் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் சென்று கனிமொழி எம்பி பேசி வந்தார். அப்போதைய அதிமுக அரசு பாரபட்ச பார்க்காமல் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்தோம்.
அந்த ஒரு சம்பவத்தை வைத்து 2021 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மையக் கருத்தாக அதிமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரச்சாரம் செய்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் கனிமொழி எம்பி பங்கேற்ற கூட்டத்திலேயே பெண்ணுக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறுமிகள் பெண்களுக்கு என பாலியல் குற்றச் சம்பவம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு உள்ளாவது அன்றாட நிகழ்வாக நடந்து வருகிறது. கட்சியில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது சந்தேகம் தான்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போலீஸில் புகார் அளிப்பேன்.. காயத்ரி ரகுராம் பகீர்..