தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (55). இவர் ஏரல் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (40). மெக்கானிக்கான இவர் பிப்ரவரி 1ஆம் தேதி ஏரல் பகுதியில் உள்ள ஓட்டல்களில் குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த ஓட்டல்களின் உரிமையாளர்கள் ஏரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு, பிற காவலர்கள் அங்கு சென்று முருகவேலை கண்டித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் முருகவேலுக்கு காவலர்கள் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.
பின்னர் ஏரல் அருகே உள்ள கொற்கை விலக்கு பகுதியில் உதவி ஆய்வாளர் பாலு, தலைமை காவலர் பொன் சுப்பையா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது, அவர்களின் பின்னால் லோடு ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்த முருகவேல், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதினார். இதில் கீழே விழுந்த பாலுவும், பொன் சுப்பையாவும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஏரல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, பாலுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த படுகொலை குறித்து ஏரல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துனர். காவலர்கள் தன்னைத் தேடுவதை அறிந்த முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவரைக் கைது செய்த காவலர்கள் பேரூரணி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முருகவேலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "உதவி ஆய்வாளர் பாலு கொலை வழக்கில் குற்றவாளி முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். இவ்வழக்கை துரிதமாகவும் விரைவாகவும் விசாரிக்க ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.
முருகவேலை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே குடிபோதையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரியவரும்.