தூத்துக்குடி:கோவில்பட்டி ராஜூவ் நகர் பகுதியில் உள்ள 6வது தெருவில் பாஜக மாநில பட்டியல் பிரிவு அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணன் என்பவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் 3 பேர் திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர். சிவந்தி நாராயணன் வெளியூர் சென்றிருந்ததால் வீட்டில் அவர் மனைவி கௌசல்யா மட்டும் இருந்துள்ளார். ஒரு பெண் உட்பட மூன்று அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் இன்று காலை 8 மணி அளவில் சோதனை நடத்தி வந்த நிலையில் கட்டுமான ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவந்தி நாராயணன் கட்டிட காண்ட்ராக்ட் தொழில், ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். அந்த தொழில் விஷயமாக அவர் சங்கரன்கோவில் சென்றிருந்தார். வெளியூரிலிருந்து வீட்டிற்கு வந்த சிவந்தி நாராயணனை அமலாக்க பிரிவு அதிகாரிகள் அரை மணி நேரமாக விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அழைத்து கொண்டு ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள அவரது ஸ்ரீ சிவந்தி எண்டர்பிரைசஸ் நிறுவன அலுவலகத்தில் வந்து சோதனை நடத்தி வருகின்றனர். முறைகேடான பணம் தொடர்பான வழக்கு ஒன்றில் சிவந்தி நாராயணனுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் வீடு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.