தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் முத்துக்கருப்பன் என்பவருக்கு சொந்தமாக 16 ஏக்கர் நிலம் உள்ளது. 1955ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகு அவரது வாரிசுகள் சொத்தை அனுபவித்துவந்தனர். இந்நிலையில் முத்துக்கருப்பன் உயிரோடு இருப்பது போன்று வேறு ஒரு நபரை போலியாக நடிக்க வைத்து ஆள்மாறாட்டம் செய்து, தூத்துக்குடி தாலுகா பனையூரைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி போலியாக பொது அதிகார பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த நிலத்தை தூத்துக்குடி முள்ளூர் முத்துக்குமாரபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு நவ. 6 ஆம் தேதி கிரையம் செய்ய முயன்றுள்ளனர். இந்நிலையில் அந்த நிலத்தின் உண்மை வாரிசுதாரான சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முரளீதரன் (31) என்பவர் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரளிடம் புகாரளித்தார்.