தூத்துக்குடி:கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில், அரபிக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் காரணமாக கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடி மாநகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்று வரை இக்கட்டான சூழ்நிலையிலேயே உள்ளது. தற்போது வரை மழை வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு வழங்கும் பணியில் தொடர்ச்சியாக மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஏழாம் நாளான இன்று (டிச.24) கிருஷ்ணராஜபுரம் 5வது தெருவில் ஏற்பட்ட மின் இணைப்பைச் சரி செய்ய, அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த அண்டோ முருகன் (வயது 42) என்ற மின்வாரிய ஊழியர், அப்பகுதிக்குச் செல்லக்கூடிய மின் இணைப்பைத் துண்டிக்காமல், மின் இணைப்பைச் சரி செய்ய முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் போலீசார் அண்டோ முருகன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின் இணைப்பைச் சரிசெய்ய சென்ற மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க:தூத்துக்குடியில் 3500 வீடுகள், 175 சாலைகள் சேதம்; ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளர் தகவல்!