தூத்துக்குடி விமான நிலையத்தில் மல்லுகட்டிய அதிமுகவினர் தூத்துக்குடி:அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு இன்று (ஜூலை 8) காலை வருகை தந்தார்.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்க்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் விமான நிலைய வாயிலில் வரவேற்க காத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்த சீனிராஜ் மற்றும் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சீனிராஜ் கோவில்பட்டியை சேர்ந்தவர் மற்றும் எம்ஜிஆர் மாநில இணை செயலாளராக பதவி வகிக்கிறார். சீனிராஜ் நாலாட்டின்புதூரில் பல வருடங்களாக கடை வைத்துள்ள நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ் இவர் கடையில் உணவருந்தியதாக கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி சீனிராஜை கட்சியை விட்டு கடம்பூர் ராஜூ நீக்கியுள்ளார்.
இதையும் படிங்க:நல்ல நிகழ்ச்சியில் இது குறித்து பேச வேண்டாம்.. அமைச்சர் முத்துசாமி கூறியது என்ன?
இந்த நிலையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி வருகை தர இருந்த நிலையில், அவரை வரவேற்க சீனிராஜ் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு கடம்பூர் ராஜூவும் வரவேற்க வந்த நிலையில், சீனிராஜை விமான நிலையத்திற்குள் வரவேற்க உள்ளே விடாமல் சிலர் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து, இருதரப்பினரும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அத்துடன் "உன்னை தான் கட்சியிலிருந்து நீக்கி ஆச்சே ஏன் இங்கு வந்தாய்" என சீனிராஜிடம் அனைவர் முன்னிலையிலும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், சீனிராஜ் தன்னை நீக்குவதற்கு இவருக்கு எந்த வித அதிகாரமும் இல்லை என்று கூறியவுடன், கோபமடைந்த கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் "கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர் கட்சியை காட்டிக் கொடுத்த நபர் நீ வரக்கூடாது" என வசைபாடியதோடு அடிக்கப் பாய்ந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தி அவரை அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விமான நிலையம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் சால்வை பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார்
இதையும் படிங்க:குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000: ‘இதனால் திமுகவினருக்கு மட்டுமே நன்மை’ - ஜெயக்குமார்