தூத்துக்குடி:அதிமுக கழக செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் இன்று காலை வருகை தந்தார். வருகை தந்த அவரை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து, கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை செய்யப்பட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டார். பின்னர், அங்கிருந்து சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு கட்சியினர் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவலன் நல வாழ்வு திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி நிமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சுமார் ஒன்றரை லட்சம் காவலர்கள், காவல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மன அழுத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஒரு திறமையான, நேர்மையான காவல் அதிகாரி, அவருக்கு 6 மாத காலமாக மனஅழுத்தம் இருப்பதாகவும், கடந்த 20 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்படி மன அழுத்தமுள்ள ஒருவரை சிகிச்சைப் பெற்று வருகின்ற ஒருவரை எதற்காக பணி கொடுத்தனர். மேலும் மன அழுத்தம் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விஷயம், ஒரு திறமையான, நேர்மையான உயர் காவல் துறை அதிகாரி இறந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இன்றைய (திமுக) ஆட்சியாளர்கள் நிமான்ஸ் மருத்துவமனையோடு காவலர் நலவாழ்வு திட்டத்தை நிறுத்தி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டம் நீடிக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும். டிஐஜி விஜயகுமார் இறப்பு தற்கொலையா? அல்லது வேறு என்ன என்பதை அரசு முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிபிஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும். குடும்பத்திலும் எந்த மன உறுத்தலும் கிடையாது.
பணியிலும் எந்த மன அழுத்தம் இல்லை என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் அவருக்கு எந்த வகையில் மன அழுத்தம் ஏற்பட்டது என்பது மிகப்பெரிய ஒரு கேள்வியாக எழுந்திருக்கிறது. அரசு இனியாவது காவலர், உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஓய்வு கொடுக்க வேண்டும். அதோடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேயே பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்த அரசு செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர் ரகுபதி ஊழல் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்டவர், வருமானதிற்க்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் இவர் ஊழல் தடுப்புதுறையை கண்காணிகத்து வருகிறார். ஊழல் செய்கின்ற ஒருவர் வழக்கு உள்ளவர் ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது. ஏன் பிஎன்று சொன்னால் அந்த வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற பொழுது ஊழல் தடுப்புத் துறையில் இவர் ஒதுக்கப்பட்டு அவருடைய கீழ் வருவது எந்த விதத்தில் சரியாக இருக்கும். இவர் உழல் பற்றி பேசுகிறார். ஆளுநருக்கு கடிதம் எழுதிக்கிறார்.
இந்த துறை இருப்பதே சரி அல்ல தவறு, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கையிலேயே ஊழல் தடுப்பு பிரிவு இருந்தால் எப்படி சரியாக இருக்கும். அது மட்டுமல்ல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் இப்போது இருக்கும் பல அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தது. வாய்தா வாங்கிட்டு வந்தனர்.