தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி நேரத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் துறைகளில் லஞ்சம் அதிகமாக வாங்கப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக, கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் மற்றும் வணிகத்தில் இருந்து வீட்டு உபயோகமாக இணைப்பாக மாற்றுதல் ஆகியவைகளுக்கு பணம் பெறப்படுவதாகவும், லஞ்சப் பணம் நிறைய கைமாறுவதாகவும் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா, சப்-இன்ஸ்பெக்டர் தளவாய் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் (விநியோகம்) அலுவலகத்தில் நேற்று (நவ.9) காலை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில் செயற்பொறியாளர் (விநியோகம்) காளிமுத்துவிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.