தூத்துக்குடி: வங்கக் கடலில் நிலவி வரும் 'மிக்ஜாம்' புயல் நேற்று சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 90 கி.மீ. தொலைவில் தீவிர புயலாக நிலவி வந்தது. இந்த புயல் இன்று தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயல் காரணமாக வட தமிழ்நாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில், கடலில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை.