உணவு கழக குடோனில் சரியான பராமரிப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு குடைச்சல் கொடுக்கும் வண்டுகள் தூத்துக்குடி: 3ஆம் மைல் பகுதியில் இந்திய உணவு கழகத்திற்கு சொந்தமான குடோன் அமைந்துள்ளது. இங்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த குடோனில் சேமித்து வைக்கப்படும் உணவு தானியங்களுக்கு, வண்டுகள் மற்றும் பூச்சிக்களால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முறையாக மருந்து தெளித்து பராமரிப்பது வழக்கம்.
அவ்வாறு முறையாக மருந்து தெளிக்க தவறினால் வண்டுகள், பூச்சிகள் அதிகமாக உருவாகி அதிகளவில் வண்டுகள் வெளியேறி அருகில் உள்ள ஆசீர்வாதம் நகர் கிழக்கு, இந்திரா நகர், திருவிக நகர், சங்கர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அப்பகுதி வாசிகள் வண்டுகள், பூச்சிகள் குடிநீர், உணவு பொருட்கள், படுக்கை விரிப்பான் மற்றும் குழந்தைகளின் காது, மூக்குகளில் உட்புகுந்து எரிச்சலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்களில் விழுவதால் வாகன விபத்தும் ஏற்படுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், அவர் சப் கலெக்டரிடம் விசாரணை மேற்கொள்ள கூறியுள்ளார். அவர் விசாரணை மேற்கொண்டு இந்திய உணவு குடோனில் முறையாக மருந்து தெளிக்க அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால், அந்த நேரத்தில் மட்டும் மருந்து தெளிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் இந்திய உணவு கழகம் கண்டுகொள்வது இல்லை. பொதுமக்கள் நேரிடையாக உணவு கழகத்தை அணுகினால் திமிராக பேசி வருகிறார்களாம். ஆகவே, மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு முழு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அப்பகுதி வாசிகள்.
இது குறித்து, ஆசிர்வாத நகர் கிழக்கு பகுதியை சேர்ந்த பேச்சியப்பன் கூறுகையில், ”இரவு நேரத்தில் வண்டுகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. இடையிடையே, சிறிது காலம் மருந்து தெளிக்கப்படுகிறது. பின்னர், திரும்பவும் வந்து விடுகிறது. சிறு குழந்தைகள் இரவு நேரத்தில் தூங்காமல் விழித்துக் கொண்டே இருக்கின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார். ஆனால் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும். ஆகவே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், செல்வ காமாட்சி நகர் பகுதியை சேர்ந்த லாவண்யா கூறுகையில், ”இந்திய உணவு கழக குடோனிலிருந்து வரக்கூடிய வண்டுகளால் தொல்லைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வண்டுகள் கடிப்பதால் அவர்களுக்கு தோல் அலர்ஜி ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க சொல்லி மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. எனவே விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி உழக்குடியிலும் அகழாய்வு மேற்கொள்ள உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு!