தூத்துக்குடி: கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பிரிவிலும், 500க்கும் மேற்ப்பட்டோர் உள்நோயாளிகள் பிரிவிலும் தங்கிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் சிகிச்சைக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் போதி படுக்கை வசதி இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டில் 60 படுக்கை வசதி தான் உள்ளது. ஆனால், 120 பேருக்கு மேலாக சிகிச்சைக்கு வரும் நிலை உள்ளதால் அனைவருக்கும் படுக்கை வசதி செய்து கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 50க்கும் மேற்பட்டவர்கள் படுக்கை வசதி கிடைக்கமால் தரையில் படுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அதிலும் பெரும்பாலானவர்கள் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடதக்கது. படுக்கை கிடைக்கவில்லை என்பதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தரையிலும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு அருகே ஷெட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வெயில், மழை என மாறி மாறி இயற்கை போக்குகாட்டி வருவதால் சிகிச்சை பெற வந்தவர்கள் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.