தூத்துக்குடி:வழக்கில் இருந்து விடுவிக்க வெளிநாடு வாழ் இந்தியரிடம் வாங்கிய வழக்கில் துணை காவல் கண்காணிப்பாளருக்கு (டிஎஸ்பி) இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதுரையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். புதுக்கோட்டை தேரி ரோட்டை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் கிருபாகரன் சாம். இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார்.
மேலும் கிருபாகரன் சாமுக்கு சொந்தமான நிலம் புதுக்கோட்டையில் உள்ளது. ஊருக்கு வந்த போது, அந்த நிலத்தை பராமரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, கிருபாகரன் சாம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்கள்! சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?
இந்த வழக்கை டிஎஸ்பி ஜெயக்குமார் விசாரித்தார். அப்போது, அவர் வழக்கில் இருந்து விடுவிக்க கிருபாகரன் சாமிடம் இருந்து 3 லட்ச ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் கிருபாகரன் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதன்பிறகு முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் தரும்படி ஜெயக்குமார் கேட்டார்.
இதுகுறித்து கிருபாகரன் சாம் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கடந்த கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் வைத்து கிருபாகரன் சாம், 50 ஆயிரம் ரூபாய் பணத்தை டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று ஜெயக்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.செல்வக்குமார் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எஸ்.ஜென்சி ஆஜராகி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் குடிபோதையில் படுக்கை அருகே சிறுநீர் கழித்த ரயில்வே ஊழியர் பணிநீக்கம்!