தூத்துக்குடி: கடந்த வாரம் இந்தோனேசியாவில் இருந்து 40 அடி நீளமுள்ள 4 கன்டெய்னர்களில் பழைய துணிகள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த இறக்குமதியை செய்ததாக கூறப்படும் நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர்.
அப்போது, பழைய துணிகள் முன்பகுதியில் வைக்கப்பட்டும், அதற்கு உள்பகுதியில் கொட்டைப்பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர், அந்த மூட்டைகளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான 65 டன் கொட்டைப்பாக்கு இருந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: இளைஞரைக் கொன்று வேலூர் கோட்டை அகழியில் வீசப்பட்ட வழக்கில் 3 பேர் கைது!
இது தொடர்பான விசாரணையில் இறங்கிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட ரவிக்குமார் என்ற ரவி பகதூரை கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள அவருக்குச் சொந்தமான அபி ஷிப்பிங் அன்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் M/s ஸ்ரீ அபிராமி அம்மன் மில்ஸ் ஆகியவற்றில் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் இருந்து கொட்டைப்பாக்கு கடத்தலில் மூளையாக செயல்பட்டவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடியில் உள்ள பிரபல ஷிப்பிங் நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என தெரிய வந்துள்ளது. இவர் சில சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் ரூ.4 கோடி வரை சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளார் என வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ரவிக்குமார் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவருக்கு தொடர்புடைய சுங்க அதிகாரிகள் குறித்தும், நிதி பரிவர்த்தனை குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது எனவும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்கள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விமானத்தின் கழிவறைக்குள் பதுக்கி வைக்கப்பட்ட தங்கக் கட்டிகள் பறிமுதல்!