தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 102வது நிறுவனர் தின விழாவில் பங்கேற்பதற்காக இன்று (நவ.10) தூத்துக்குடி வந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'தமிழக அரசிடமிருந்து தீபாவளி வாழ்த்து கிடைக்காது. அதனால், முதலாவதாக சகோதரியாக தீபாவளி வாழ்த்துக்களை கூறுகிறேன். சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற தென்தமிழகம் தற்போது சாதி பிரச்சனையினால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. ஏனென்றால், தச்சநல்லூரில் 2 இளைஞர்களை சாதியை சுட்டிக் காண்பித்து சிறுநீர் கழிக்கப்பட்டது மிக வேதனையாக உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்துள்ளதை தான் சொல்ல வேண்டும்.
நாங்குநேரி விவகாரம், வேங்கை வயல் விவகாரம், மனிதர் மீது சிறுநீர் கழிப்பது ஆகிய கவலையளிக்கும் பிரச்சனைகள் இருக்கையில், நீட் தேர்வு (NEET Exam) மீது தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் செலுத்துகிறது. இது தவறு. மாணவர்கள் நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்துவிட்டனர். அதில், பிரச்சனை உள்ளதென்றால் சட்ட ரீதியாக அணுகலாம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'சனாதனம்' பற்றி பேசியதற்கு மன்னிப்பே கேட்காமல், நான் பேசியது பேசியதுதான் எனக் கூறுகிறார். மன்னிப்பு கேட்பதற்கு நிறைய விஷயம் இருக்கு. இலங்கையில், முதலமைச்சர் பேச்சு ஒளிபரப்ப முடியவில்லை என்று வருந்துகின்றனர். இலங்கையில் உச்சகட்ட பிரச்சனைகள் நடந்த போது மத்தியில் ஆட்சியில் இருந்தும், எந்த அளவுக்கு தமிழர்களைப் பாதுகாக்க முயற்சித்தார்கள்? காங்கிரஸுடன் கூட்டணி வைத்துகொண்டு இதற்காக என்ன தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டனர்? இப்போது இதைப் பார்த்தப் பின்பு கூட மேலும், அரசு தீவிரமாக செயலாற்ற வேண்டும்' என வலியுறுத்தினார்.