அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் உருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த கடம்பூர் ராஜூ இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடிப்படை வசதிகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்திருப்பதனால் தான் தமிழ்நாட்டில் அதிமுகவின் அரசு 31 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வந்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தயார் என ஸ்டாலின் கூறினார். அதற்குப் பதிலடியாக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்த்து வந்தது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் மு.க. ஸ்டாலின் சொன்னது போல முதலமைச்சருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தினாரா?
சொன்ன சொல்லிலிருந்து பின் வாங்குவதற்காகவும் மக்களிடையே தவறான தகவல்களை சொல்வதற்காகவும் ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என முதலமைச்சர் சொல்லியிருப்பது பொருத்தமாக இருக்கிறது. இடைத்தேர்தலில் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்- கடம்பூர் ராஜூ நாங்குநேரியில் காங்கிரஸ் களத்திலேயே இல்லை. அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் மக்களை தவிக்க விட்டுவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அங்கு சென்று விட்டார் என்ற கோபம் மக்களிடையே உள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும். அதிமுக அரசுக்குதான் மக்களின் ஆதரவு உண்டு என்பதை இந்தத்தேர்தல் நிரூபிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: தொடங்கியது வடகிழக்குப் பருவமழை - சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை!