உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே தின பேரணி இன்று நடைபெற்றது. காலை ஒன்பது மணி அளவில் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி சுமார் 2 கிலோ மீட்டர் பயணித்து சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே முடிவடைந்தது. பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, "மே தினத்தை கொண்டாடுவதற்கான உரிமை திமுகவிற்கு மட்டுமே உள்ளது. ஏனெனில், உழைப்பாளர்களுக்காக போராடி இன்றும் போராடிக் கொண்டிருக்க கூடிய இயக்கம் திமுகதான். சென்னையில் மே தின பூங்கா அமைத்து அதில் உழைப்பாளர் சின்னம் எவ்வாறு இருக்க வேண்டும், அது வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அதன் அருகிலேயே இருந்து வடிவமைத்து தந்தவர் மறைந்த தலைவர் கருணாநிதி. ஆகவே மே தினத்தை உரிமையோடு எடுத்து கொண்டாடுவதற்கான பெருமை திமுகவையே சேரும்.