தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக நிர்வாகி வெட்டி கொலை -போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி: குலையன்கரிசலில் திமுக செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கருணாகரன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

murder

By

Published : Jul 23, 2019, 7:57 AM IST

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசலை சேர்ந்தவர் வி.எஸ்.கருணாகரன் (வயது 55). இவர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தகாரர் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டுவந்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான இவர், திமுக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராவார்.இந்நிலையில் நேற்று மாலை 5.40 மணியளவில் தனது காரில் குலையன்கரிசலில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்றுவிட்டு காரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.

சுடுகாடு மாடசாமி கோவில் அருகே வந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரை வழிமறித்து சரமாரியாக வெட்டியதில், கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

கருணாகரன் கொலை செய்யப்பட்டதற்கான காவல்துறையினர் விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோலியம் கொண்டு செல்வதற்காக குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஓ.என்.ஜி.சி நிர்வாகத்திற்கு ஆதரவாக கருணாகரன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் சங்கத்தை பூட்டிவிட்டு சாவியை கருணாகரன் கையில் எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அரசியல் ரீதியாகவும் கருணாகரனுக்கு எதிரிகள் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டாரா என்பது குறித்தும் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளரான பில்லா ஜெகன் ஏற்கனவே கொலை வழக்கில் சிக்கியுள்ள நிலையில், அனிதாவின் ஆதரவாளரான கருணாகரன் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details