தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் அதிமுக-பாஜக கூட்டணி கட்சி வேட்பாளராக பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலர் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் நலம்பெற வலிமையான ஆட்சி வேண்டும். வலிமையான ஆட்சியை தருவதற்கு நல்லதொரு வலிமையான தலைமை வேண்டும். வலிமையான தலைமைதான் நிலையான ஆட்சி தரமுடியும். அந்த வலிமை பிரதமர் மோடியிடம்தான் உள்ளது. நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது. எனவே, பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும். அப்போது தான் நாடு வளம் பெறுவதோடு பாதுகாப்பாக இருக்கும். நாம் அமைத்திருக்கும் கூட்டணி மெகா கூட்டணி. இதைப்பார்த்து இன்று ஸ்டாலின் என்ன செய்வதென்று தெரியாமல் பேசமுடியாமல் திணறி வருகிறார்.
இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் இந்த ஆட்சி நிறைவேற்றி உள்ளது. தமிழகத்தில் மூன்றாயிரம் குளங்களை தூர்வாரி புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொழில் முதலீட்டு மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 400 ஆயிரம் கோடியை தமிழகம் முதலீடாக பெற்றுள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.