கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட சக மீனவர்கள் தூத்துக்குடி:வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக மீனவர்கள் கடந்த 09, 10 ஆகிய இரு நாட்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதன் மறுநாள் 11 ஆம் தேதி மாலை, தூத்துக்குடி கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்த ஜெனிபர் (51) தனது சொந்த நாட்டு படகில் தனது பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (62), எக்லிண்டன் (61), ஆரோக்கியம் (40) ஆகியோருடன் சேர்ந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றள்ளனர்.
இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கரை திரும்ப வேண்டும். ஆனால், வெகு நேரம் ஆகியும் படகு திரும்பி வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த கீழ வைப்பார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடலோர காவல் குழுமத்தினருக்கும், மீனவர் நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை மாவட்ட நிர்வாகம் சரிவர செய்ய தவறிவிட்டதாக கூறிய நிலையில், அங்குள்ள கீழவைப்பார் கிராமத்தில் உள்ள சக மீனவர்களே கடலில் சென்று தேடியுள்ளனர். அப்போது சுமார் 25 மைல் தூரத்தில் மூழ்கிக் கொண்டிருந்த பைபர் படகின் மேலே தத்தளித்துக் கொண்டிருந்த அந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர், மீனவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தருவைகுளம் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து கூறுகையில், “கடந்த வியாழன் அன்று இரவு கடலுக்குச் சென்ற நாட்டுப் படகு மீனவர்கள் வரவில்லை. இதுகுறித்து மீன்வளத்துறைக்கு அறிக்கை அளித்தோம். இந்திய கடலேர காவல்படைக்கு தெரியப்படுத்தினோம். அவர்களும் வரவில்லை. அதன் பின் கிழவைப்பார் கிராமத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மூலம் கடலுக்குச் சென்று தேடினோம்.
அப்போது அவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை சக மீனவர்கள் மீட்டு காப்பாற்றியுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் ஆபத்தான முறையில் இருக்கும் போது விமானம், ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்துவோம் என்று கூறினர். ஆனால் எந்த ஆதரவும் எங்களுக்கும் இல்லை. மீனவர்கள் தான் மீனவர்களை காப்பாற்ற வேண்டி நிலை உள்ளது” என்றார் வேதனையுடன்.
இதற்கு முன்னதாக, காலை செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், “தூத்துக்குடி, கிழவைப்பார் கிராமத்தில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்ற போது வெகு நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. பின்னர், மீன்வளத்துறை, மீனவர்கள் சேர்ந்து படகு எடுத்து கொண்டு தேட ஆரம்பித்தோம். நாம் அனுப்பிய குழு அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
மீனவர்கள் தான் மீனவர்களை காப்பாற்றி இருக்கின்றனர். ஆனால் அரசு காப்பற்றியதாக கூறுவது ஏற்க முடியாத ஒன்று. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்குமானல் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க:Ooty Rose Show: 18-வது ரோஜா கண்காட்சி... கண்களுக்கு விருந்தளித்த வண்ண ரோஜாக்கள்!