தூத்துக்குடி: தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் பெரும் சேதமடைந்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தென் மாவட்டங்கள் அதன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. ஆனால் தற்போது வரை சில பகுதிகளில் தண்ணீர் வடியாததால் அப்பகுதிகளில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைப்பாதிப்புகளை அதிகளவில் சந்தித்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டனர் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு தொடரும் விடுமுறை: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால், மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளின் நலன் கருதி பள்ளிகள் கல்லூரிகளுக்கான விடுமுறை நாளை(டிச.21) ஒருநாள் மட்டும் தொடரும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.