ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து 200 டன் ஜிப்சம் அகற்றம் தூத்துக்குடி:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து இன்று (ஜூன் 23) 200 டன் ஜிப்சம் கழிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், இக்கழிவுகளை ஆந்திரா மற்றும் விருதுநகரில் உள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக மேலாண்மை குழுவினர் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை (Tuticorin Sterlite Plant) மூடக்கோரி, கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் வாயிலாக, இந்த ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 14 வகையான அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அந்தவகையில் சல்பூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், பெட்ரோலிய வாயு, ஹை ஸ்பீட் டீசல், பர்னஸ் ஆயில், திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ நைட்ரஜன் உட்பட 14 வகையான வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகள் மட்டும்தான் மிச்சம் இருந்தன. இந்நிலையில், ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட்டும், ஆலை கழிவுகளை அகற்றுபவர்கள் பக்கவாட்டில் உள்ள வாசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், செயலற்ற இயந்திரங்களை அகற்ற மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகளை நிராகரித்தனர்.
இந்த நிலையில், ஆலையின் கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ள நிலையில், பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர் சரவணன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன், தீயணைப்புத்துறை அதிகாரி ராஜ், தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர் ரங்கநாதன், ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி சரவணன் ஆகியோர் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி வந்தனர். இந்த குழுவினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து ஜிப்சம் கழிவுகளை அகற்றுவதற்காக இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் ஜிப்சத்தை வெட்டி எடுக்கும் பணி நடைபெற்றது.
200 டன் ஜிப்சம் கழிவுகள் வெளியேற்றம்:இதைத் தொடர்ந்து, வெட்டி எடுக்கப்பட்டுள்ள ஜிப்சம் கழிவுகளை ஆலையிலிருந்து வெளியேற்றுவதற்காக இன்று பிற்பகல் 1 மணியளவில் நான்கு டிப்பர் டாரஸ் லாரிகள் உள்ளே அனுப்பப்பட்டு மாலை 4.40 மணியளவில் 200 டன் ஜிப்சம் ஏற்றி ஆலையில் இருந்து வெளியே வந்தன. இந்த லாரிகளில் ஏற்றப்படும் ஜிப்சம் கழிவுகள் ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு லாரியும், விருதுநகர் ஆர் ஆர் நகரில் அமைந்துள்ள ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கு மூன்று லாரிகளிலும் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
இந்த பணிகள் முழுவதும் சிசிடிவி மூலம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறை மூலம் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை உள்ளூர் மேலாண்மைக் குழு கூடி, அந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அடுத்த வாரம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து, ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை மல்லிக்கு வந்த சோதனை: வரத்து அதிகரிப்பால் மலிவு விற்பனையில் உச்சம்!