தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதன்முறையாக மக்கள் வாழ்விட பகுதியில் தங்கம் - சிவகளை அகழாய்வில் கண்டெடுப்பு

சிவகளை அகழாய்வில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தங்கப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை புதைத்த இடத்தில்தான் இதுவரை தங்க பொருள்கள் கிடைத்து வந்த நிலையில், முதன்முறையாக சிவகளையில் மனிதர்களின் வாழ்விட பகுதியில் தங்கம் கிடைத்துள்ளது.

By

Published : Aug 12, 2022, 1:44 PM IST

சிவகளை அகழாய்வில் தங்க பொருள் கண்டெடுப்பு
சிவகளை அகழாய்வில் தங்க பொருள் கண்டெடுப்பு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கின.

இந்த அகழாய்வு பணிகள் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீ மூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக தற்போது வரை 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில், சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், முத்திரைகள் உட்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகளை அகழாய்வில் தங்க பொருள் கண்டெடுப்பு

இதற்கிடையில், சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள ஒரு செங்கல் 25 செ., நீளமும், 16 செ.மீ., அகலமும், 5 செ.மீ., உயரமும் உள்ளது. இந்நிலையில், தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்துவரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. மேலும், அந்த தங்கத்தின் மேல் சிறு சிறு கோடுகள் உள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பொறுத்தவரை இறந்தவர்களை புதைத்த இடத்தில்தான் தங்க பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் மக்கள் வாழ்விட பகுதியில் தங்கப் பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிவகளை அகழாய்வு: முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியை திறக்கும் பணி தொடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details