தூத்துக்குடி:தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து நகரமே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்கும் பணிகளை, மாநில அரசுடன் சேர்ந்து இந்திய கடலோர காவல் படையினரும், இந்திய ராணுவத்தினரும் பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் தீவிரமாக மீட்புப் பணிகள் செய்யப்பட்டது.
இதனால், தென் மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. ஆனால், தற்போது வரை சில பகுதிகளில் தண்ணீர் வடியாததால் அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடியில் பெய்த மழை வெள்ளத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் குழந்தைகள், வயதானவர்கள், கைக்குழந்தையுடன் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் நேரில் சென்று படகின் மூலமாக மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடியில் பெய்த கனமழையில், அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சுற்றியுள்ள அனைத்து குளங்களும் நிரம்பி உடைபட்டது. இதில், ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரால், மீட்பு வாகனங்களால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.