தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 4:00 PM IST

ETV Bharat / state

திருச்செந்தூர் சுரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்.. சூரன் வதையை காண மயில்காவடி எடுத்து குவிந்த பிறமாவட்ட பக்தர்கள்!

Tiruchendur Subramania Swamy Temple: கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மயில் காவடி எடுத்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Tiruchendur Subramania Swamy Temple
திருச்செந்தூர் சுரசம்ஹார நிகழ்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.

கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று (நவ.18) மாலை திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் வைத்து நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகள், மாவட்டங்கள் மற்றும் பல ஊர்களில் இருந்தும் வருகை புரிந்து உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்செந்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது குறித்து சென்னையைச் சேர்ந்த அன்பு கூறுகையில்,"சென்னையில் இருந்து மயில் காவடி எடுத்து வருகிறேன்.

அறுபடை வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக நடந்து வருகின்றேன். முதலில் திருப்பரங்குன்றம் பார்த்துவிட்டு இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்திருக்கின்றேன். சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் காத்து இருக்கின்றனர்.

சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருச்செந்தூர் என்பது சூரனை வதம் செய்த இடம் என்பதால் பார்க்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்து ஆசை. அந்த ஆசை தற்போது நிறைவேறி உள்ளது" என்றார்.

அரக்கோணம் பகுதியில் இருந்து வந்த முத்துநாயகம் கூறுகையில், "உலக நன்மை வேண்டி அரக்கோணத்தில் இருந்து அறுபடை வீடுகளுக்கும் பாதயாத்திரை செல்வது எங்களுடைய குறிக்கோள். முதல் படையாக திருப்பரங்குன்றத்தை பார்த்து விட்டோம். இரண்டாம் படை திருச்செந்தூர் வந்து இருக்கின்றோம்.

சூரசம்கார நிகழ்ச்சி இங்கு சிறப்பு பெற்றது. ஆகவே, சூரசம்ஹார நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக பாதையாத்திரையாக மயில் காவடி ஏந்தி வந்து இருக்கின்றோம். அறுபடையும் பார்க்க வேண்டும் என்பது தான் நோக்கம். இப்போது இரண்டாவது படை திருச்செந்தூர் பார்க்கப் போகின்றோம். மூன்றாவது பழமுதிர்சோலை, நான்காவது பழனி, ஐந்தாவது சுவாமிமலை, ஆறாவது திருத்தணி, முதல் முறையாக திருச்செந்தூர் கோயில் வருவதால் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க:தனித்தீர்மானத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

ABOUT THE AUTHOR

...view details