தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு பணி மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22ஆம் தேதி தூத்துக்குடி வருவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் செய்தியாளர்களிடம் கூறுகைையில், ''2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு அரசின் நிவாரணங்கள் இழப்பீடுகளை நாங்கள் வேண்டாம் என்றுதான் கூறினோம். ஆனால் அந்த சமயத்தில் எங்களை சமாதானப்படுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்குவதாக உறுதி அளித்து இழப்பீடுகளையும், நிவாரணங்களையும் பெற சம்மதிக்க வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தபடி பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கவில்லை. ஒப்புக்காக அரசின் கடைநிலை ஊழியர் வேலையை வழங்கியுள்ளனர். வேறு சில சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட எங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கவில்லை. எனவே ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கும் கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராளிகளுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்துள்ளோம். ஆனால் கோரிக்கைகளை பெற்றுக்கொள்ளும் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பேட்டி இந்த சூழ்நிலையில் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோரிடம் மனு அளித்தோம். ஆனால் தொடர்ச்சியாக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அரசினை எதிர்த்து போராட வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு அரசுக்கு எதிராக எந்த கூட்டத்தையும், போராட்டத்தையும் நாங்கள் நடத்தவில்லை. ஆகவே எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் தூத்துக்குடிக்கு முதலமைச்சர் வரும் தினத்தன்று அவரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்'' என்றனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்