தூத்துக்குடி: தூத்துக்குடி நகரின் மையப் பகுதியான வ.உ.சி சாலையில் சுமார் 25 ஆண்டுகளாக யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் உள்ள ஏராளமான வணிகர்கள், பொதுமக்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். ஆண்டுக்கு சுமார் 130 கோடி ரூபாய் அளவிற்கு இந்த வங்கி வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.
ஆனால் தற்போது வங்கி கிளை ஒன்றிணைப்பு என்ற கொள்கையின் அடிப்படையில், இந்த கிளையை அண்ணா நகரில் 4ம் ரயில்வே கேட் அருகே உள்ள மற்றொரு கிளையோடு இணைக்க வங்கி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவர்கள் என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், தொழிலதிபர்கள், மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வங்கி மற்றொரு வங்கியோடு இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இது குறித்துப் பேசிய அவர் 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தூத்துக்குடி நகர் மையப்பகுதியில் சிறப்பாக இயங்கி வந்த யூனியன் வங்கியை இடமாறுதல் என்பதற்காகவும், ஆள் குறைப்பு திட்டத்தினை அமல்படுத்துவதற்காகவும் வங்கியை இணைக்கின்றனர். அதனால் வாடிக்கையாளர்கள் என்ற முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டுள்ளோம். இந்த வங்கி கடந்த 25ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வருகிறது.