இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், எனது கணவர் ஜெயராஜும், எனது மகன் பென்னிக்ஸும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் மொபைல் கடை வைத்து நடத்திவந்தனர். ஜூன் 19ஆம் தேதி மாலை ரோந்துவந்த காவலர்கள் கடையை அடைக்கும்படி கூறியுள்ளனர். என் கணவரும் மகனும் உடனடியாக கடையை அடைத்துவிட்டனர். அதேபோல் ஜூன் 20ஆம் தேதி ரோந்துவந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் ஜேசுராஜ் ஆகியோர் என் கணவரை கொச்சை வார்த்தைகளால் திட்டி சட்டையைப் பிடித்து அடித்துள்ளனர். எதற்கான என் தந்தையை அடிக்கிறீர்கள் என என் மகன் கேட்டதற்கு காவல் நிலையம் வா தெரியும் என சொல்லியிருக்கிறார்கள்.
காவல் நிலையம் சென்றபோது, வாசலில் நின்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் என் கணவரை கொச்சை வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அடித்துள்ளார். இதை பார்த்த என் மகன், என் அப்பா உடல்நிலை சரியில்லாதவர் அவரை அடிக்காதீர்கள் என கூறியிருக்கிறார். இதைக் கேட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், போலீஸையா எதிர்த்து பேசுகிறாய் என உதவி ஆய்வாளர் பால்துரையை பார்த்து இவனையும் (பென்னிக்ஸ்) அடிங்க என கூறியுள்ளார். அப்போது அங்கிருந்த காவல் நிலைய தன்னார்வ தொண்டர்களும் இணைந்து என் மகனை தாக்கியுள்ளனர். கொடூரமாக தாக்கியதில் என் மகனின் பின்பகுதி கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது. என் கணவரையும் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து நிர்வாணமாக லாக்கப்பில் போட்டுள்ளனர்.