தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய்த் துறையை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்பகலில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், நோய்க் கட்டுப்பாட்டு மையங்கள், அங்குள்ள மக்களுக்கு அளிக்கப்படும் உதவிகள், கட்டுப்பாட்டு அறையின் மூலமாக ஒருங்கிணைப்பு செய்யப்படும் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
'போர்க்கால நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது'- அமைச்சர் மா.சு தூத்துக்குடியில் தடுப்பூசி கையிருப்பு
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் கிராமப்புறங்களில் இன்று கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். மேலும், தடுப்பூசி போடும் பணிகளையும் தொடங்கி வைத்துள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக 23,000 டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த 26,500 டோஸ்கள் கையிருப்பில் உள்ளன.
தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் காயல்பட்டினத்தில் பொதுமக்களின் வசதிக்காக அங்குள்ள மருத்துவமனை விரைவில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் சீரமைக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெகு காலமாகப் பூட்டிக்கிடக்கும் பொது வழியைத் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள், சாதாரணப் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
ஹோமியோபதி, யுனானி, சித்த சிகிச்சை மையங்கள்
மொத்தத்தில் 65 விழுக்காடு படுக்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 35 விழுக்காடு படுக்கை காலியாகவே உள்ளது. தமிழ்நாடு அரசின் போர்க்கால நடவடிக்கையின்பேரில் கரோனா தொற்று குறைய ஆரம்பித்துள்ளது. இனி படிப்படியாக குறையும். கரோனாவுக்கு சித்தா, அலோபதி, ஹோமியோபதி, யுனானி மருத்துவ முறைகளிலும் சிகிச்சை அளிப்பதற்காக 37 இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கரோனாவுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 தனியார் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுமக்கள் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக விளம்பரங்கள் வைக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பான தேவைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு மூலம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அழுத்தம் தரப்பட்டு சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம்" என்றார்.
கறும்பூஞ்சை பாதிப்பு தொடர்பான கேள்விக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "கறும்பூஞ்சைக்கு 181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் உத்தரவுப்படி, பரவல் நோயாக கறும்பூஞ்சை தொற்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் 30 படுக்கை கொண்ட வார்டுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோய்த்தொற்றுக்குத் தேவையான மருந்துகளை அளித்திட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் அவை கிடைத்திடும்" என்றார்.
இதையும் படிங்க:'18+ க்கு தடுப்பூசி: அறிவித்தால் மட்டும் போதாது. செயல்படுத்துங்கள்' - கே எஸ் அழகிரி