தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிவரும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தொற்றால் ஆங்காங்கே சில இடங்களில் சிறுவர்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
சிறுவர்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அல்லாத இடங்கள் தயார்படுத்தப்பட்டுவருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் அடைக்கலாபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தூத்துக்குடி ஆறுமுகசாமி அன்பு ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறார்களுக்கான கரோனா சிகிச்சை மையத்தை நேற்று (ஜூன் 2) தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கரோனா தொற்றால் இதுவரை 361 சிறார்கள் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அது போன்று பாதிக்கப்படும் சிறார்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனியாக சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் பெற்றோர்களை இழந்துள்ளதாக தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 72 குழந்தைகளிடமிருந்து மனுக்கள் வந்துள்ளன. அவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத்தொகை வழங்கப்படும். அவர்களுடைய படிப்பிற்காக மாதம் ரூ.3000 வழங்கப்படும்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாகப் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கப்பட்டுவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக பஞ்சாயத்து அளவிலான குழுக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தவும், குழந்தைத் திருமணங்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் துறையில் உள்ள அதற்கான தனிப்பிரிவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த இளம்பெண்ணின் சகோதரர் சுந்தரிடம் திமுக சார்பில் நிவாரணத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் அமைச்சர் வழங்கினார்.
ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.