இந்தியக் கடலோர காவல் படையினர் கன்னியாகுமரி கிழக்கு கடல் எல்லைப் பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கன்னியாகுமரி கிழக்கு கடல்பகுதியில் 70 நாட்டிக்கல் மைல் தொலைவில், இலங்கையைச் சேர்ந்த சுகந்தி, செரல், நெட்மி ஆகிய 3 மீன்பிடிப் படகுகள் எல்லை தாண்டி வந்து, மீன்பிடித்ததாகத் தெரிகிறது.
அதில் வந்த 15 பேரைக் கடலோர காவல் படையினர் கைது செய்து, தூத்துக்குடி கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அழைத்துவரப்பட்ட அவர்களுக்கு துறைமுக மருத்துவக் குழுவினர், கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கை மீனவர்களைக் கைது செய்து, ராமேஸ்வரம் சிறையில் அடைப்பதா? அல்லது அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்புவதா என்பது குறித்து துறைரீதியாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.