தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெருவை சேர்ந்தவர் வேம்புகுரு. இவரது மகன் மாரி செல்வம் (வயது 30). இவர் காங்கிரஸ் கட்சியில் கருங்குளம் வட்டார செயலாளராக இருந்தார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்டுகிறது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி மாரிசெல்வத்திற்கும் அவரது தம்பி மணிகண்டனுக்கும் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் மணிகண்டனுக்கு உதவியாக தாயார் லட்சுமியும் இணைந்ததாக கூறப்படுகிறது. இதில், லட்சுமியும், மணிகண்டனும் இணைந்து உருட்டுக் கட்டையால் மாரிசெல்வத்தினை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் மயங்கி விழுந்த மாரிசெல்வத்தினை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயார் லெட்சுமி, மற்றும் தம்பி மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.