தூத்துக்குடி:வ.உ.சி துறைமுகம் வழியாக நாள்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டும், வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகின்றன. இந்த செயல்பாடுகள் அனைத்தையும் சுங்கத் துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் துபாய் நாட்டு ஜெபல்அலி துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர் ஒன்றில் நாங்குநேரியில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு கணினிகள் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து, அந்த கண்டெய்னா் சோதனைக்கு பின்னர் நாங்குநேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து அந்த கண்டெய்னரை மும்பைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தூத்துக்குடி சுங்கத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்து உள்ளது.