தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ.2.14 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளின் தொடக்க விழா நேற்று(ஆகஸ்ட் 6) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலா ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம், கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட சித்த மருத்துவ பிரிவு புதிய கட்டடம் உள்ளிட்டவையை திறந்துவைத்தார்.
மொத்தம் ரூ.2.14 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். அதில்
சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "நடிகர் சங்க தேர்தல் வரும்போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை நடத்தினால் போட்டியில்லாத நிலை உருவாகும் என வலியுறுத்தினோம். அது திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பொருந்தும். நடிகர் சங்கத்தை போலவே தயாரிப்பாளர் சங்கமும் நீதிமன்றத்தை நாடியதால்தான் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
தயாரிப்பாளர், நடிகர் சங்கம் என அவர்கள் அமர்ந்து பேசி சுமுக முடிவுக்கு வரத் தயாரானால், அதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தரும். அவர்களிடம் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நாங்கள் வழி வகுப்போம்" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், 'எஸ்.வி.சேகர் அதிமுகவில் இல்லை. அவருக்கு அடையாளம் கொடுத்தது அதிமுகதான். அவர் நன்றி மறந்தவர். நன்றி மறந்தவர்களுக்கு பதில் சொல்வது எங்களைப் பொருத்தவரை சரியாக இருக்காது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில் தொடக்கம் - அமைச்சர் காமராஜ்