தூத்துக்குடி:கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(36). லாரி ஓட்டுநராக இருந்தபோது, விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்த சக்திவேல் தற்போது மாற்றுத்திறனாளியாக தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தார். மேலும் வலது கையிலும் உள்ள சிறு பாதிப்பு பாதிப்புள்ளது. தனது மனைவியை இழந்து தவிக்கும் இவருக்கு 2 பெண் குழந்தைகளை பல போராட்டங்களுக்கு நடுவே வளர்க்க வேண்டிய நிலைமையில் உள்ளார்.
இதே போன்று, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). இவரும் விபத்தில் ஒரு கால் இழந்து மாற்றுத்திறனாளியான போதிலும் தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதனிடையே சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை பகுதியில் நின்று வெளியூரில் இருந்து வரும் பயணிகளை சவாரி ஏற்றி தங்களது பிழைப்பினை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பயணிகளை ஏற்றி, இறங்கிவிடுவதால் விபத்து அதிகரித்து வந்த காரணத்தினால் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வரக்கூடிய ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ் வழியாக சர்வீஸ் சாலைக்கு செல்கின்றன. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளையரசனேந்தல் சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி செல்கின்றனர். இதையெடுத்து அப்பகுதியில் நின்று சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி இறங்கி விட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ஆட்டோ வைத்திருப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டுமின்றி தங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தால் மட்டுமே ஆட்டோ ஓட்ட முடியும் என்று கூறியதால் இருவரும் 5 ஆயிரம் கொடுத்து உறுப்பினராகி உள்ளனர். இருந்த போதிலும், மாற்றுத்திறனாளிகள் இருவரையும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சில ஆட்டோ ஓட்டுநர்கள் இயக்கவிடமால் தடுத்து வருகின்றனர். இது மட்டுமின்றி, காவல்துறையினரை வைத்து இருவரையும் ஆட்டோவை ஓட்டவிடாமலும் தடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.