தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி தொழிலதிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர்

தூத்துக்குடி தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்பாண்டியைக் கொல்ல கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர் மகாராஜன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அருகே தொழிலதிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர்
தூத்துக்குடி அருகே தொழிலதிபரை கொல்ல கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர்

By

Published : Jun 19, 2021, 1:12 PM IST

Updated : Jun 19, 2021, 3:45 PM IST

தூத்துக்குடி: தொழிலதிபர் பொன்பாண்டி என்ற ரவி டீக்கடை, ரியல் எஸ்டேட், டாஸ்மாக் பார் உள்ளிட்ட தொழில்கள் செய்துவருகிறார். இந்த நிலையில் இவருக்கும் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் மகாராஜன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது.

இதில் உதவி ஆய்வாளர் மகாராஜன், பொன்பாண்டியை கொலை செய்யும் நோக்கில் கூலிப்படையினரை ஏவியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொன்பாண்டி நேற்று (ஜூன் 18) புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பொன்பாண்டி பேசுகையில், "தாளமுத்துநகர் பகுதியில் தொழில் செய்துவரும் எனக்கு உதவி ஆய்வாளர் மகாராஜன் தொழில்ரீதியாக பல நெருக்கடிகள் கொடுத்துவந்தார். அவருடைய எண்ணத்திற்கு ஏற்ப பணம், பொருளைத் தரவேண்டும் என வற்புறுத்தினார். இதற்கு உடன்பட மறுத்ததால் ஏற்கனவே இரண்டு முறை கூலிப்படையினரை ஏவி கொலைசெய்ய முயன்றார். ஆனால் இதை தெரிந்து சுதாரித்துக்கொண்ட நான் அதிலிருந்து தப்பித்துக் கொண்டேன்.

தொழிலதிபர் பொன்பாண்டி செய்தியாளர்களுக்கு பேட்டி
ஆனால் நேற்று மாலை 5.30 மணி அளவில் எனது வீட்டை சுற்றி ஒன்பது நபர்கள் என்னை கொலை செய்வதற்காக அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்தனர். நண்பர்கள் உதவியுடன் அவர்களைத் தடுத்து அதில் மூன்று பேரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். பிடிபட்டவர்கள் அனைவரும் உதவி ஆய்வாளரின் சொந்த ஊரை சேர்ந்தவர்கள், இது தவிர திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் தப்பிச் சென்றவர்களை கைதுசெய்துள்ளனர். ஏற்கனவே உதவி ஆய்வாளர் மகாராஜன் என்னை கொலைசெய்ய திட்டம் தீட்டியது தொடர்பாக புகார் அளித்து ஒப்புகைச்சீட்டு ரசீதும் பெற்றுள்ளேன்.

மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் தனியார் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. விசாரணையில் உதவி ஆய்வாளர் மகாராஜனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நேற்று மீண்டும் என்னை கொலைசெய்ய முயற்சி செய்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? ஸ்டாலின் இன்று ஆலோசனை

Last Updated : Jun 19, 2021, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details