தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஒலைக்குளம் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் வளர்த்த ஆடுகள் ஆதிக்க சாதியினரின் வயலில் இடம் மாறி மேய்ந்தால், ஆத்திரமடைந்து ஆட்டின் உரிமையாளரை காலில் விழ வைத்து சாதிய வன்கொடுமை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் துறையினர் ஏழு பேரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஓலைக்குளம் சென்று பாதிக்கப்பட்ட பால்ராஜை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, "இந்தச் சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை சட்டத்தின் கீழ் எந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து அதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பால்ராஜூக்கு ஆறுதல் தெரிவித்த ஆட்சியர் அவரது குடும்பத்திற்கு தனி பட்டா மற்றும் வீடு வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார். உடனடியாக அதற்கான தீர்வு காணும் வகையில் அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பால்ராஜின் மகனுக்கு வீட்டுமனை பட்டா, பசுமை வீடு ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் வன்கொடுமை என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாதிய வன்கொடுமை: ஆடுகள் இடம் மாறி மேய்ந்ததால் காலில் விழ வைத்து கொடூரம்!