தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் பேருந்து நிலையத்தில் கை கழுவும் வசதி கொண்ட தற்காலிக நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்கினர். பேருந்து நிலையத்தில் பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றின் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் அதிக காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம். தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின்படி பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் ஏதேனும் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது குறித்து புகார் வந்தாலோ, கிளப்புகள் திறந்தாலோ அவற்றைப் பூட்டி சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.