தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையம் அருகே வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று(ஜூலை 11) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் உள்பட பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் 847 பேருக்கு, 4 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளைக் கூட்டுறவு துறை அமைச்சர் வழங்கினார்.
விரைவில் கல்விக்கடன், சுய உதவிக் குழு கடன் ரத்து
பின்னர் நிகழ்ச்சியில் பேசி அவர்," தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் எவ்வளவு பேர் வந்து கடன் கேட்டாலும் அதை வழங்க வேண்டும். அதற்கான நிதியை தமிழ்நாடு அரசு வழங்க தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் கொண்டுவரப்படும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடன், சுய உதவிக்குழு கடன் ஆகியவை அரசால் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.