தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், ஆயிரத்து 125 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 75 லட்சத்து 35 ஆயிரத்து 805 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவது தான் இலக்கு என டிடிவி தினகரன் கூறியிருப்பது வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் உள்ளது. ரஜினி, கமல் இருவரும் திரைப்படத்துறையில் இணைந்து பணியாற்றுகின்றனர். அதே போல் அரசியலுக்கு வந்தால் இணையட்டும். எங்களுக்கு அதை பற்றி கவலையில்லை.
கமல், ரஜினி பற்றி கவலை இல்லை மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் எத்தனை வாக்கு விழுக்காடு பெற்றார், அதிமுக எத்தனை வாக்கு விழுக்காடு பெற்றது என்பது மக்களுக்கு தெரியும். அதிமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மக்கள் வேறு நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், அதனுடன் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று 9 தொகுதிகளில் வெற்றியை வழங்கினர். அதற்கு அடுத்தாற்போல் வந்த வேலூர் மக்களவை தொகுதி 0.5 சதவீத வெற்றி வாய்ப்பை இழந்தோம். இதன் பின்னர் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், இரண்டு தொகுதிகளிலும் 60 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளோம்.
நாற்பது ஆண்டுகளாக திமுகவையே பார்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக அதிமுக உள்ளது. பொன்.ராதாகிருஷ்ணனை பொருத்தவரையில் மக்களவையை பற்றி தான் பேசலாம். சட்டப்பேரவையை பற்றி பேசுவது பொருத்தமாக இருக்காது. அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை
நலத்திட்ட உதவிகளை வழங்கிய கடம்பூர் ராஜூ தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தவுள்ளோம். எந்த திரைப்படம் வெளியிடப்பட்டாலும், அதற்கு திரையரங்குகள் தர வேண்டும் என தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் அறிவுறுத்தியுள்ளோம். இதற்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இது அமல்படுத்தப்பட்டால் திரைத்துறை அனைத்து நிலைகளில் சீர்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.