தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாறும் தூத்துக்குடி - தூய்மை தூத்துக்குடி

தூத்துக்குடி: வளர்ச்சி அடையாத கிராமங்களில் சமுதாய கழிப்பறைகள் மூலமாக திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

clean-india-scheme-beneficiaries-in-thoothukudi
clean-india-scheme-beneficiaries-in-thoothukudi

By

Published : Oct 31, 2020, 4:05 PM IST

Updated : Nov 18, 2020, 10:06 PM IST

தமிழ்நாட்டின் வளர்ந்துவரும் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மாவட்டமாக தூத்துக்குடி திகழ்கிறது. தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளையும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியையும் கொண்டுள்ளது.

மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள், 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 10 வட்டங்கள், 3 வருவாய் கோட்டங்கள், 19 பேரூராட்சிகள், 403 ஊராட்சிகள், 480 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன.

இருப்பினும் மாவட்டத்தில் இன்றளவிலும் பல்வேறு பகுதிகள் மானாவாரி வேளாண் நிலமாகப் பேணப்பட்டுவருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமங்களும், குக்கிராமங்களும் மிக அதிகம்.

இந்நிலையில் மாவட்டத்தில் குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கிராமங்கள் இன்றளவிலும் வளர்ச்சிப்பாதையில் ஆரம்ப நிலையிலேயேதான் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் கிராமங்களின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவரும் நிலையில், கிராமங்கள் பலவற்றில் தற்போதுதான் முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தத் தொடங்கப்பட்டுள்ளன.

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி ஓட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி, இந்திராநகர் ஆகிய பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா சிறந்த ஊருக்கான மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருதினையும் ஊராட்சி நிர்வாகம் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஈடிவி பாரத் சார்பாக கள ஆய்வு மேற்கொண்டோம். அதில் கிடைத்த தகவலின்படி, கிராமங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளது அறிய முடிகிறது. அதில் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களுக்கான முக்கியத் திட்டமாகத் தூய்மை பாரத திட்டத்தைச் சொல்லலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளிலும் கழிப்பறை அமைத்து திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதன்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் வீட்டுக்கு ஒரு கழிப்பறை அமைப்பதற்கு, மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 12 ஆயிரம் ரூபாய் மானியமாக பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

2013ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட வீடுகளில் கழிவறை கட்டுவதற்காக எடுத்த கணக்கெடுப்பின்படி இரண்டாயிரத்து 389 வீடுகளுக்கு 886.68 லட்சம் ரூபாய் மானியத்துடன் கழிவறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வேகமெடுத்த இந்தத் திட்டம், தூத்துக்குடியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்றியுள்ளது.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தூய்மை பாரத கணக்கெடுப்பின் தூத்துக்குடி மாவட்டம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா சிறந்த மாவட்டமாக தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், தென்னிந்திய அளவில் இரண்டாவது இடத்தையும், தேசிய அளவில் எட்டாவது இடத்தையும் பிடித்தது. இதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், தென்னிந்திய அளவில் இரண்டாவது இடத்தையும், தேசிய அளவில் ஒரு இடம் முன்னேறி 7ஆவது இடத்தையும் பிடித்தது.

மேலும் ஆர்டர் ஆஃப் மெரிட் படி 2019ஆம் ஆண்டு எஸ்.கே.ஓ.சி.எச். வெள்ளியும், 2020 கணக்கெடுப்பில் தங்கமும் வென்று சாதனை புரிந்துள்ளது.

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாறும் தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி அடையாத கிராமங்களில் சமுதாய கழிப்பறைகள் மூலமாக திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அக்கிராமங்களில் வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

அதன்படி 2020-21ஆம் நிதியாண்டுக்கான திட்ட மதிப்பீட்டில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நான்காயிரத்து 525 வீடுகளுக்கு 543 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மத்திய அரசு ரூ.325.50 லட்சமும் மாநில அரசு ரூ.217.20 லட்சமும் மானியமாக பயனாளிகளுக்கு வழங்கவுள்ளது.

தூய்மை பாரத திட்டத்தின்கீழ் பயனடையாதவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்ற நிலைமையை உருவாக்க ஒவ்வொரு பிர்கா வாரியாகவும், மண்டல வாரியாகவும் திட்ட பணியாளர்கள், திட்ட மேற்பார்வையாளர், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகிறது.

இந்த வாய்ப்பை தவறவிட்டவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட ஊராட்சி முகமை அலுவலகத்தில் தூய்மை பாரத திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்களை நிரப்பி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் நேரில் ஒப்படைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூய்மை பாரத திட்டத்தின்கீழ் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் சூழலில், சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதிலும் 226 சமுதாய சுகாதார வளாகங்கள் 678 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் வருவாய் கிராமங்களில் ஐந்தாயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராம ஊராட்சி, 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு கீழ் உள்ள ஊராட்சி என இரு வகையாகப் பிரிக்கப்பட்டு திரவ கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள 15 கிராம ஊராட்சிகள் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு கீழுள்ள 114 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 129 கிராம ஊராட்சிகளில் 257 சமுதாய உறிஞ்சு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 128 கிடைமட்ட உறிஞ்சு குழாய்களும், 107 செங்குத்து உறிஞ்சு குழாய்களும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் நுண் உரக்கழிவு மேலாண்மை ரூ.259.10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாக அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.

திட்ட பயன்கள் குறித்து பயனாளிகளிடம் கேட்கையில், "மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் வீட்டில் கழிப்பறை கட்டுவதற்கு மானியம் வழங்கியது. அது எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. இதனால் எங்களது வீட்டில் கழிவறை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தோம். எங்களுடைய வீட்டு பெண் பிள்ளைகள் இப்பொழுது வெளியே செல்லாமல் வீட்டில் உள்ள கழிவறையை பயன்படுத்தி வருவது நிம்மதியை தருகிறது.

கழிவு நீரினை கூட வீணாக்கக் கூடாது என்பதற்காக வீட்டை சுற்றிலும் காய்கறி செடிகள், தோட்டங்களில் அமைத்து கழிவுநீரை தோட்ட செடிகளுக்கு பாய்ச்சி காய்கறி அறுவடை செய்து அதை பயன்படுத்துகிறோம். இதனால் சுற்றுப்புற தூய்மை பாதுகாக்கப்படுவதுடன் நம்முடைய தேவைகளையும் நாமே நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.

நாம் சுத்தமாக இருந்தால்தான் ஊரை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். நாம் சுத்தமாக இருக்கும் போதுதான் 4 பேருக்கு அதன் பயன்கள் குறித்து எடுத்துச் சொல்ல முடியும். எனவே சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாப்பது அவசியம். மக்களுக்கு பயனுள்ள வகையில் தூய்மை பாரத திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்ட வடிவங்களையும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்'' என்றனர்.

இதையும் படிங்க:“முயற்சி திருவினையாக்கும்” நிகழ்த்திக் காட்டிய கேரளாவின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்

Last Updated : Nov 18, 2020, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details