தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள குளத்தூர் பகுதியில் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துலுக்கன்குளம் புதிய பூக்கள் கபடி குழு சார்பாக கபடிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலைஞானபுரம் அணியும் அதற்கு எதிராக சிலுவைபுரம் அணியும் மோதினர். இதில் கலைஞானபுரம் அணி தோல்வியடைந்தது.
கலைஞானபுரம் அணியினர் தோல்வியுற்றதும் துலுக்கன்குளம் கிராம இளைஞர்கள் கைதட்டி ஆரவாரமாகக் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. இந்த போட்டி முடிந்ததைத் தொடர்ந்து துலுக்கன்குளம் இளைஞர்கள் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் போதையில் வீடு திரும்பும் போது கலைஞானபுரத்தை சேர்ந்த தொண்டியம்மாள் என்றவரின் வீட்டின் அருகே தொந்தரவு செய்யும் வகையில் அதிகமான ஒலி எழுப்பி உள்ளனர். அப்போது அவர்களின் செயலை தொண்டியம்மாள் கண்டித்துள்ளார்.
அதில், தொண்டியம்மாளுக்கும் துலுக்கன்குளத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தகவல் அறிந்து துலுக்கன்குளம் கிராமத்தினர் கலைஞானபுரம் கிராமத்திற்கு சென்று கற்களால் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர்.
இந்த அடிதடியில் பொன்னுசாமி, பிரியதர்ஷினி, மாடசாமி, பரமசிவம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்குத் தலையில் காயம் ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்.. தூத்துக்குடி, கடலூர் மீனவர்கள் கோரிக்கை என்ன?