தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் எம்எல்ஏ, காற்றாலை பொறியாளர் மாறி மாறி தாக்குதல்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன?

தூத்துக்குடியில் விவசாய நிலத்தில் காற்றாலைகளை வைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கும், காற்றாலை பொறியாளருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Etv Bharat காற்றாலை அமைப்பதில் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினர் காயம்
Etv Bharat காற்றாலை அமைப்பதில் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினர் காயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2023, 7:05 PM IST

காற்றாலை அமைப்பதில் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினர் காயம்

தூத்துக்குடி:ஒட்டப்பிடாரம் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் ‘செம் கார்ப்’ என்ற தனியார் நிறுவனமானது காற்றாலைகளை அமைத்து வருகிறது. இவ்வாறு அமைக்கப்படும் காற்றாலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், காற்றாலைகள் அமைக்க உதிரி பாகங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் மூலம் பொதுப் பாதைகள் சேதமடைவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தங்களது குற்றச்சாட்டுகளை மனுக்களாக அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘செம் கார்ப்’ நிறுவனமானது கடந்த 3 நாள்களாக ஒட்டப்பிடாரம் பகுதியில் ஒரு இடத்தில் காற்றாலை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளைக் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் அறிவிற்கோ (28), என்பவர் பணியாற்றி அப்பணிகளைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், அவ்வாறு பணிகள் நேற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர்ராஜ் (தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளார்) அங்கு பணியிலிருந்த அறிவிற்கோவிடம் தகராறு செய்துள்ளார். மேலும், அவரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர் ராஜ் உள்ளிட்ட அவருடன் வந்த 7 பேர் தாக்கினர். இதில், காயமடைந்த அறிவிற்கோ சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காயமடைந்த அறிவிற்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த மூன்று நாள்களாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று அப்பகுதிக்கு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர்ராஜ் எனது இடத்தில் ஏன் வேலை செய்கிறீர்கள் எனக் கூறி தகராறு செய்து அவர் உள்பட அவருடன் வந்த ஏழு பேர் என்னை கடுமையாக தாக்கினர்.

தற்போது பணிகள் நடைபெற்று வரும் இடம் தாங்கள் முழு அனுமதி பெற்ற பிறகு தான் அப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறியும் அதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அங்கு பணிக்காக வைத்திருந்த பைப்புகள் மற்றும் காங்கிரீட்டுகளை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர்ராஜ் மற்றும் அவருடன் வந்தவர்கள் உடைத்து சேதப்படுத்தினார்கள். இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கும்” என்று கூஉறினார்.

பின்னர் இதுகுறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுந்தர்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனது இடத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் காற்றாலை நிறுவனத்தினர் பணிகளை மேற்கொண்டதால் இதுகுறித்து நான் சுட்டிக் காட்டியதற்கு தனியார் காற்றாலை நிறுவனத்தைச் சார்ந்த இரண்டு பேர் என்னை கடுமையாக தாக்கினர். என் மீது தாக்குதல் தொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.

இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்களை தாக்கியதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இரு தரப்பினரும் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒட்டப்பிடாரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:‘தூத்துக்குடியில் மாணவர்களை கத்தியால் குத்திய சக மாணவன் தப்பியோட்டம்’ - பொருட்படுத்தாத கல்வி நிர்வாகம்!

ABOUT THE AUTHOR

...view details