திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியை சேர்ந்தவர்கள் சக்திவேல்- சந்தியா தம்பதியினர். இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட்டு வரும் மின் நிலைய பணியில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தியா இரண்டாம் முறையாக கருத்தரித்தார். இதை விரும்பாத அவர்கள் கருக்கலைப்பு செய்வதற்காக சந்தியாவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதற்கிடையே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சக்திவேல், மனைவியை தனது பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு அதே மருத்துவமனையில் ஆண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். சக்திவேலின் 11 மாத ஆண் குழந்தையை பாட்டி ரேவதி கவனித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பச்சிளங்குழந்தை வார்டு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து ரேவதியுடன் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இளைஞர் 1 மாத ஆண் குழந்தையுடன் விளையாடுவதாக வலம் வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் குழந்தையுடன் வாலிபர் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், ரேவதி மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார்.
பின்னர் திரும்பிவந்து பார்க்கையில் குழந்தையும்-வாலிபரும் மாயமாகி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் குழந்தையை தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என எண்ணி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.