தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் 3500 வீடுகள், 175 சாலைகள் சேதம்; ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளர் தகவல்! - chief secretary examines thoothukudi

Thoothukudi Flood: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக மூவாயிரத்து 500 வீடுகள் மற்றும் 175 சாலைகள் சேதம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

Chief Secretary examines the effects of heavy rains in thoothukudi
தூத்துக்குடி கனமழை பாதிப்புகளை தலைமை செயலாளர் ஆய்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 1:20 PM IST

தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழையின் போது, தூத்துக்குடி மாநகரத்தை ஒட்டி உள்ள கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, தூத்துக்குடி மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்காக மாறியது. இதைத் தொடர்ந்து, தற்போது கோரம்பள்ளம் குளத்தில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (டிச.24) ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையினால் 150 இடங்களில் பல்வேறு குளங்களில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்தையும் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் 175 இடங்களில் உடைந்துள்ளன.

எனவே அவற்றை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக முடிவடையும். மாவட்டத்தில் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்சார வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு பணி முடிவடைந்த பின்னர் சேதம் குறித்து தெரிவிக்கப்படும்” எனக் கூறினார்.

அப்போது தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாவை முற்றுகையிட்ட அப்பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், “இவ்வளவு பாதிப்பு ஏற்படவும், குளத்தில் உடைப்பு ஏற்படவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம். தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையிலும், மழை அளவை முறையாகக் கணக்கீடு செய்யாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் குளத்தின் 24 மதகுகளையும் திறந்துள்ளனர்.

இதன் காரணமாக அதிகளவு தண்ணீர் வெளியேறியதால் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு, பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம்” எனக் கூறினர். மேலும் வடிகால் பகுதியில் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், இவ்வளவு மழை பெய்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பல்வேறு பகுதிகளில் குளம் உடைப்பு ஏற்பட்டு, தற்போது விவசாயம் செய்ய முடியாத நிலையில் தாங்கள் உள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள வாழை மற்றும் நெற்பயிர் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, இவ்வளவு பெரிய மழையை யார் கொடுத்தார்? என தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா எழுப்பிய கேள்விக்கு, இறைவன் தான் இவ்வளவு பெரிய மழையை கொடுத்தார் எனவும், ஆனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காததே இந்த பாதிப்புகளுக்கு காரணம் என்றும் விவசாயிகள் பதிலளித்தனர். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.டி.பிரபாகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:ஆய்வுக்குச் சென்ற இடத்தில் சோதனை.. அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details