தூத்துக்குடி:தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த அதி கனமழை காரணமாகத் தூத்துக்குடி நகரமே தண்ணீரால் சூழப்பட்டுத் தனித் தீவானது. இந்த நிலையில், இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (டிச.21) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கீதா ஜீவன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அந்தோனியார்புரம், மறவன் மடம் உள்ளிட்ட பகுதியில், பாதிப்புக்கு உள்ளான பொது மக்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள் முதலமைச்சரிடம் கூறுகையில், “வருடந்தோறும் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு முழுமையான தீர்வு வேண்டும். இங்கு முக்கியத் தொழிலாகப் பனை மரத் தொழில் தான் பிரதானம். அந்த பனை மரமும் முற்றிலும் உடைந்து, விழுந்து நாசமாகின” என்றனர். இதைக் கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.