தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 6ஆவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்று (பிப்.17) தொடங்கியுள்ளார்.
இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ளும் அவர், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஸ்ரீவைகுண்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் பகல் 12 மணிக்கு அளவில் திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மதியம் 1 மணிக்கு ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி மாப்பிள்ளையூரணியில் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதனைத்தொடர்ந்து 18ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம். அதனைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்களுடன் கலந்துரையாடல், தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
மாலை 4 மணிக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், 5.10 மணிக்கு பாவூர்சத்திரத்தில் பொதுக்கூட்டம். 6.30 மணிக்கு தென்காசி இசக்கி மஹாலில் மகளிர் குழுவுடன் கலந்துரையாடுகிறார்.
19ஆம் தேதி காலை 10 மணிக்கு கடையநல்லூர் பள்ளிவாசல் அருகே பொதுக்கூட்டம். வாசுதேவ நல்லூரில் மகளிர் குழுவுடன் கலந்துரையாடல், சங்கரன்கோவிலில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடுகிறார்.